சன் டி.வி. கேபிளை கபளீகரம் செய்கிறதா அரசு கேபிள்?

மச்சீர்க் கல்வி விவகாரத்தில் சறுக்கிய அ.தி.மு.க. அரசுக்கு, அடுத்த உலுக்கல் கேபிள் வடிவில் வந்திருக்கிறது. தமிழக அரசின் ‘அரசு கேபிள் டி.வி.’ சேவையை கடந்த 2-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த தினத்தில் இருந்தே புலி வால் பிடித்த கதையாகப் பிரச்னை மேல் பிரச்னைகள். மக்கள் விரும்பிப் பார்க்கும் சில சேனல்களை தமிழக அரசு கேபிளில் பார்க்க முடியாத கோபத்தால்… ஆபரேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆங்காங்கே நடக்கும் பிரச்னைக்கு இதுவரைத் தீர்வு காண முடியவில்லை.

இந்நிலையில், ‘அரசு கேபிள் டி.வி. தனக்கெனத் தனியாக கேபிள் பதிக்காமல், சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான கேபிளில் தனது ஒளிபரப்பை நடத்தி வருகிறது’ என்று ‘கல்’ கேபிள் லிமிடெட் சார்பில் அதன் பொது மேலாளர் ராஜேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் படி ஏறி இருக்கிறார்.

”எங்களது நிறுவனம் எம்.எஸ்.ஓ. மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வியாபாரத்தில் எங்கள் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு வகுக்கப்பட்ட கேபிள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, நாங்கள் உரிய லைசென்ஸ் பெற்று, 12 ஆண்டுகளாக இந்தத் தொழிலை முறையாகச் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இதற்கெனத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கேபிள் வயர்களைப் பதித்துள்ளோம். அதற்கான கட்டணமும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் தவறாமல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோக ‘டிராக்’ வாடகை என்ற கட்டணத்தையும் அரசுக்கு செலுத்துகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி. நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். இந்த நடைமுறையில் நாங்கள் எந்த சட்டவிதிகளையும் மீறவில்லை.

கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் கார்ப்பரேஷன், தனக்கெனத் தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசர அவசரமாக சேவையைத் தொடங்கி உள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் நிறுவன கேபிள் வயர்களை ஆக்கிரமித்து… அந்தக் கேபிளில் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்கள், சட்ட விரோதமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் துணையுடன் நடப்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷ​யம்.

எங்கள் கேபிளுக்கு நாங்கள் ஆண்டு வாடகை செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்படாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி., எங்களுக்கு சொந்தமான கேபிளைப் பயன்படுத்துவது பெரும் குற்றம். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், குமரன் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில், நொய்யல் போன்ற இடங்களில் எங்கள் கேபிள்களை, அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து, அதில் தனது இணைப்பைக் கொடுத்துள்ளது. இதுபோல, கோவை, ஈரோடு எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் உதவியுடன் அரசு கேபிள் அத்துமீறல் நடத்தி வருகிறது.

‘அரசு கேபிளின் இந்தச் செயல் திருட்டுத்தனம் போன்றது’ என அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் இந்தக் குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கி, கடந்த 7-ம் தேதி தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் மனு கொடுத்தோம். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமை உள்ளது. இப்படி சட்டப்படி நடக்கும் எங்கள் வியாபாரத்தைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசு கேபிள் நிறுவனம் செயல்படுகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)க்கு எதிரானது. எனவே, எங்கள் கேபிள்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்த அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாங்கள் கொடுத்த புகார் மீது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்!” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் ராஜேஷ்.

”அவர்கள்தான் அனுமதி வாங்கவில்லை!”

கடந்த 8-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பால் வசந்தகுமார், ”அரசு கேபிள் நிறுவனத்துக்கு தனி கேபிள் இருக்​கிறதா? ஒளிபரப்புக்கு எந்த கேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று அடுத்தடுத்துக் கேள்வி கேட்டு அரசுத் தரப்பைத் திணறவைத்தார். கடந்த 12-ம் தேதி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்தார்கள். ”நாங்கள் யாருடைய இணைப்பையும் துண்டித்தோ, கைப்பற்றியோ ஒளிபரப்பு வழங்கவில்லை. ‘கல்’ கேபிள் லிமிடெட் பல இடங்களில் முறையாக அனுமதி வாங்காமல் ஒளிபரப்பை செய்து வருகிறது. இந்த வழக்கு குறித்த விரிவான பதில் மனுவை மேலும் ஒரு வார காலத்துக்குள் தாக்கல் செய்கிறோம்…” என்று அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஆக, அரசுக்கும் சன் டி.வி.க்குமான மோதல் நீதிமன்றத்தின் மூலமாக சூடு பிடித்துள்ளது!

கட்டணம் தர முடியாது!

பொதுமக்களுக்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்​களுக்கும் பல இடங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

கோவையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் மூர்த்தி, ”எங்க வாடிக்கையாளர்கள், ‘சன் பேக்கேஜையும் சீக்கிரமே கொடுக்குறீங்களா… இல்லேன்னா டிஷ் வாங்கி மாட்டிக்கட்டுமா?’-னு கோபப்படுறாங்க. நிலைமை இப்படியே போயி ஆளாளுக்கு டிடிஹெச் வாங்கி மாட்டிட்டா, நாங்க என்ன சார் பண்றது? பல வீட்டுல, ‘கட்டுன டெபாசிட்டைத் திருப்பிக் கொடுங்க. கிட்டத்தட்ட ஒரு மாசமா உருப்படியான சேனல்கள் எதுவும் தெரியலை. அதனால போன மாசத்துக்கு கேபிள் கட்டணம் தர முடியாது’னு சொல்றாங்க!” என்று வேதனைப்பட்டார்.

தர்மபுரியைச் சேர்ந்த அரசு கேபிள் ஆபரேட்டரும், மாவட்ட கேபிள் ஆபரேட்டர் சங்கத்தின் தலைவருமான அருளரசு, ”கலெக்ஷனுக்காக எந்த வீட்டு முன்னால போய் நின்னாலும் 10, 15 லேடீஸ் வந்து சூழ்ந்துக்கிறாங்க. நீங்க பழையபடியே கொஞ்சம் கூடுதலா கட்டணம் வாங்கிக்​கோங்க. எங்களுக்கு எல்லாச் சேனலும் வரணும். இல்லைன்னா, கேபிளைக் கழட்டிட்டுப் போங்க’ன்னு திட்டுறாங்க!” என்கிறார்.

புதுக்கோட்டை ஜி.ஆர் கேபிள் உரிமையாளரான ஸ்ரீதர், ”மக்களுக்கு பதில் சொல்லி மாளலை, சார். ‘எங்க சௌகரியத்துக்காகத்தான் டி.வி. பாக்குறோம். நீங்க கட்டாயப்படுத்தி வேற சேனலைப் பாக்கவைக்க முடியாது’னு சத்தம் போடுறாங்க… இப்படியே போனா, என்ன நடக்கப்போகுதோ?” என்றார்.

அரசு கேபிளில் சன் டி.வி.!

நாகை மாவட்டத்தில் ஓர் ஆச்சர்யம். இங்கு அரசு கேபிள் துவக்கப்பட்டுவிட்டாலும், அதிலும் சன் டி.வி. வருகிறது. ”இது முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய பகுதி. இங்கு உள்ள மக்கள், கேபிள் டி.வி. கனெக்ஷன் இருக்குதான்னு கேக்குறதையே, ‘சன் டி.வி. இருக்கா?’னுதான் கேட்பாங்க. சன் டி.வி. இல்லாத கேபிள் கனெக்ஷனை அவங்களால் நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அதனால, அரசு கேபிளில் இணைஞ்சுட்டாலும், சன் டி.வி. இல்லாம கொடுக்குறது கிடையாது. சன் டைரக்ட்டில் இருந்து லிங்க் எடுத்துக் கொடுத்துட்டு இருக்கோம்!” என்று சொன்னார் ஆபரேட்டர் ஒருவர்.

சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்கள், ”மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் அரசு கேபிளில் இல்லை. கட்டண சேனல்களையும் சேர்த்து வழங்கினால், அரசு கேபிளில் இணைந்துகொள்ளத் தயார்னு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அவரோ, ‘உங்க சூழ்நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், அரசு உத்தரவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது’னு சொல்கிறார். 10 வருஷத்துக்கு முந்தி நாங்க எந்த டெக்னாலஜி மூலமா கேபிள் ஒளிபரப்பு செஞ்சோமோ, அந்த டெக்னாலஜி மூலமா அரசு கேபிள் ஒளிபரப்பப்படுவதால் தெளிவில்லாமல் இருக்கு. இதை எடுத்துச் சொன்னா, ‘நீ தி.மு.க-காரன்; சன் டி.வி-க்கு சப்போர்ட்டாப் பேசுறே’னு சிக்கல்ல மாட்டிவிடுறாங்க. உண்மை என்னன்னா, சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்களில் 80 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-காரர்கள்தான்!” என்று சொல்கிறார்கள்.

நிறுத்தப்பட்ட அரசு கேபிள்!

நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. தொடக்கத்திலேயே ஆபரேட்​டர்களிடம் வரவேற்பு கிடைக்க​வில்லை. இருந்தாலும் திட்டத்தைத் தொடங்கியாக வேண்டுமே! அதனால் அவசரகதியில் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்ற ஆபரேட்டரது இணைப்பு  மூலம்  கொடுக்கப்பட்டது. மதிய நேரத்தில் சீரியல் பார்க்க டி.வி. முன்பாக அமர்ந்த பெண்களுக்கு தாங்கள் விரும்பிய சேனல்கள் தெரியாததால் ஆபரேட்டரை போனில் வறுத்து எடுத்தனர். ‘எல்லா சேனலும் கொடுக்க முடியலைன்னா, நாளைக்கே வேறு ஆபரேட்டரிடம் இணைப்பை பெறுவோம்…’ என்று சண்டைக்கு வந்ததால், அரசு கேபிள் இணைப்பைக் கொடுத்த ஒரே ஆபரேட்டரும் பணிந்துவிட்டார். இதனால் ஓரிரு மணி நேரத்திலேயே நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு நின்றுபோனது.

பேச்சு வார்த்தைக்கு இப்போதுதான் குழு!

கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அரசு கேபிளில் கட்டண சேனல்களைக் கொண்டு வர விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது அரசு. இந்த குழுவில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகிய ஐந்து பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறாவதாக இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் இடம் பெறப் போகிறாராம். ”இதெல்லாம் அரசு கேபிளை தொடங்குவதற்கு முன்பே செஞ்சிருக்கணுமா இல்லையா..? ‘சோறு ஆக்கி இலையில போட்டு வெச்சிட்டு குழம்பு வைக்கப் பருப்பு வாங்கக் கடைக்கு போன’தைப் போல இருக்குது!” என்று புலம்புகிறார்கள் கேபிள் ஆபரேட்டர்கள்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக