சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையிலும் குழப்பங்கள்!

 

போட்டு உடைக்கிறார் பிரணவ் சச்தேவா

சுப்பிரமணியன் சுவாமிக்கு இணையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது பொது நலன் வழக்காடு மையம் என்ற அமைப்பு. சாந்தி பூஷண், அவர் மகன் பிரசாந்த் பூஷண் மற்றும் பிரணவ் சச்தேவா ஆகிய மூவர் இந்த மையத்தின் வழக்கறிஞர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து எத்தனையோ வதந்திகள் பரவிக்கிடக்க… இன்றைய நிலவரம் அறிய பிரணவ் சச்தேவாவை சந்தித்தோம்!

”உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய் வதில், சி.பி.ஐ. குழப்பங்களைச் செய்வதாகச் சொல் கிறார்களே?”

”தயாநிதி மாறன் குறித்து கடந்த மே மாதக் கடைசியிலேயே எல்லாத் தகவல்களும் வந்துவிட்டன. பத்திரிகைகளில் வந்த செய்திகளோடு வேறு சில ஆவணங்களும் எங்களுக்குக் கிடைத்தன. கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 6-ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தது.

‘சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றது சி.பி.ஐ. இதன் பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் வேணுகோபால், ‘தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தயாநிதி மாறன், சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸுக்கு விற்பனை செய்தது நிரூபிக்கப்படவில்லை. இதே மாதிரி ஆதாயம் பெற்றதற்கான விவகாரம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். இதற்கிடையே மீடியாக்கள், ‘மாறனுக்கு சி.பி.ஐ. கிளீன் சிட்(நீறீமீணீஸீ நீலீவீt சுத்தமானவர்)’ என்று ரிப்போர்ட்களை வெளியிட்டனர். நாங்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.

அதனால், கடந்த 5-ம் தேதி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தோம். அப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக இருக்கும் சம்பவங்களையும் ஆதாரங்களையும் விளக்கி, ‘இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ. வழக்கைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? தயாநிதி மாறனை விசாரிக்காமல் இருப்பது ஏன்?’ என்று கேள்விகளை எழுப்பினோம். அதனால் கடந்த 8-ம் தேதி சி.பி.ஐ-யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தை 2ஜி ஊழல் வழக்கைக் கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகளிடம் பேசினார். ‘பத்திரிகைகளில் தயாநிதி மாறனுக்கு கிளீன் சிட் கொடுக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் யாருக்கும் கிளீன் சிட் கொடுக்கவில்லை. இது விசாரணையில் இருக்கிறது. மேக்சிஸ் இயக்குநரான ரால்ஃப் மார்ஷல், ஏர்செல் கைமாறுவதற்கு முன்பே, அமைச்சராக இருந்த தயாநிதி மாறனோடு மொரீஷியஸில் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்புகளுக்குப் பின்னர்தான் ஏர்செல்லுக்கு உரிமங்கள் கொடுக்கப் பட்டன. சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தபோது உரிமங்கள் கொடுப்பதில் தாமதம் செய்தனர்…’ என்று சி.பி.ஐ. தரப்பில் கூறிவிட்டு, ‘ஆனால் அமைச் சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை கட்டாயப்படுத்தி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்கவைத்த விவகாரத்தை சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை!’ என்றார்.

கடந்த ஜூன் மாதம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னவர்கள் இப்போது மாற்றிச் சொன்னதால், நாங்கள் சி.பி.ஐ-யின் நேர்மை மீது சந்தேகம் எழுப்பி னோம். விரைவில் எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றப் பத்திரி கையும் தாக்கல் செய்வார்கள் என்றே நம்புகிறோம்.”

”தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு என்னென்ன ஆதாரங்களைக் கொடுத்துள்ளீர்கள்?”

”2004 மார்ச் முதல் டிஷ்நெட் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் ஆகியவற்றுக்கு சிவா குரூப் உரிமை யாளர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு கட்டங் களில் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தனர். 2004 மார்ச் மாதம் எட்டு ஏரியாக்களுக்கும் பின்னர் மேலும் ஆறு விண்ணப்பங்கள் என சுமார் 14 உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் போட்டு இருந்தனர். இது குறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் தொலைத் தொடர்பு அமைச்சருக்கு பல முறை கடிதம் எழுதினார். அவர், ‘தன்னைக் கட்டாயப்படுத்தி, மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் டி.அனந்த கிருஷ்ணனுக்கு விற்பனை செய்யப்பட்டது, அதுவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டது’ என்கிறார். இது உண்மைதானா என்பதை சி.பி.ஐ-தான் வெளியில் கொண்டுவர வேண்டும்!”

”உங்கள் மனு பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இருக்கிறதே?”

”எங்களிடம் தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட ஃபைல்களின் நகல்கள், சிவசங் கரனுக்கும் மாறனுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள், மேக்சிஸ் நிறுவனம் எப்படி ஏர்செல்லை வாங்கியது, அந்த டீல்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவை உள்ளன. குறிப்பாக நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறிக்கையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்துக் கொடுத்து உள்ளோம்.”

”டிராய் ரிப்போர்ட் மூலம் ஆ.ராசா தப்பித்துவிட முடியுமா?”

”சி.பி.ஐ. நேர்மையாக வழக்கை நிரூபிக்க முயற்சித்தால், இது முடியாது. ஏராளமான சாட்சியங்கள் இவர்களுக்கு எதிராக உள்ளன. அதனால் இந்த ஒரு ரிப்போர்ட் மூலம் அவர்கள் தப்புவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கை ‘வீக்’ செய்ய இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன. குற்றப் பத்திரிகையிலும் ஏராளமான குழப்பங்கள். வாக்குமூலங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது,  இந்த வழக்கு நிரூபிக்கப்படாமல்… ஊழல் விவகாரத்தை சிதறடிக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது!”

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக